காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி புறவழிச் சாலையில், நின்றிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில், தாய் கண் முன்பே, இரு மகன்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி கிராமத்தைச் சேர்ந்தவர் குளோரி, 38. இவரது கணவர் ஏற்கனவே இறந்த நிலையில், யுவராஜ், 18, சந்தோஷ், 16, என இரு மகன்களுடன் வசித்து வந்தார். மூத்த மகன் தனியார் கல்லுாரியில் முதலாம் ஆண்டும், இளையமகன் பிளஸ் 1ம் படித்து வந்தனர். இந்நிலையில், கீழம்பி அருகே நடந்த காய்கறி சந்தைக்கு, குளோரி, யுவராஜ், சந்தோஷ் ஆகிய மூவரும், 'ஹோண்டா யூனிகார்ன்' பைக்கில், 'ஹெல்மெட்' அணியாமல், நேற்று முன்தினம் இரவு சென்றனர். காய்கறிகள் வாங்கிக் கொண்டு, கீழம்பி புறவழிச் சாலையில், மூவரும் பைக்கில் வந்து கொண்டிருந்தனர். பைக்கை யுவராஜ் ஓட்டி வந்தார். அப்போது, சாலையோரம் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த லாரியின் பின்புறம் பைக் மோதியது. இதில், மூவரும் கீழே விழுந்தனர். தலை உள்ளிட்ட இடங்களில் படுகாயமடைந்த யுவராஜ், சந்தோஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த குளோரி, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாலுச்செட்டிச்சத்திரம் போலீசார், யுவராஜ், சந்தோஷ் ஆகிய இருவரின் சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து, பாலுச்செட்டிச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.