உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வேரோடு சாய்ந்த பழமையான வேப்ப மரம் ஏழு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

வேரோடு சாய்ந்த பழமையான வேப்ப மரம் ஏழு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திருவாலங்காடு:சின்னம்மாபேட்டையில், 60 ஆண்டுகள் பழமையான வேப்ப மரம், வேரோடு சாலையில் விழுந்ததால், ஏழு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கனகம்மாசத்திரம் ---- தக்கோலம் நெடுஞ்சாலையில், திருவாலங்காடு அருகே சின்னம்மாபேட்டை கிராமம் அமைந்துள்ளது. இங்கு, நெடுஞ்சாலையை ஒட்டி அரசு நடுநிலைப் பள்ளி எதிரே, 60 ஆண்டுகள் பழமையான வேப்ப மரம் இருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணிக்கு, பலத்த மழை மற்றும் காற்று வீசியதால், மரம் வேரோடு சாய்ந்தது. ஆட்கள் நடமாட்டம் இல்லாததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மரம் சாலையின் குறுக்கே விழுந்ததால், இரவு 1௨:00 முதல் காலை 7:00 மணி வரை நெடுஞ்சாலை வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், திருவாலங்காடு சுற்றுவட்டாரத்தில் இருந்து, ரயிலுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள், 1 கி.மீ., சுற்றிச் சென்றனர். மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என, கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். அதன்பின், சின்னம்மாபேட்டை முன்னாள் ஊராட்சி தலைவர் சரண்யா, 'பொக்லைன்' இயந்திரத்தை வரவழைத்து, மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினார். அதன்பின் போக்குவரத்து சீரானது. 17 மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு மழை மற்றும் பலத்த காற்று வீசியதால், பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், வேப்ப மரம் அருகே இருந்த மின்கம்பத்தின் மீது விழுந்ததில், மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. திருவாலங்காடு மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். மதியம் 11:40 மணிக்கு மின்சாரம் வினியோகிக்கப்பட்டது. இதனால், சின்னம்மாபேட்டை பெருமாள் கோவில் தெரு பகுதியில், நேற்று முன்தினம் மாலை 6:00 மணி முதல் நேற்று மதியம் 11:30 மணி வரை, 17 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி