கூட்டுறவு சர்க்கரை ஆலை ஜப்தி செய்வதை தடுக்க வலியுறுத்தல்
திருத்தணி:திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்த வாங்கப்பட்ட கடனால், 'ஜப்தி' செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதை தடுக்க வேண்டும் என, நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. திருத்தணி வருவாய் கோட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், ஆர்.டி.ஓ., கனிமொழி தலைமையில், கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில், விவசாயிகள் தெரிவித்ததாவது: திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்த, 1992ம் ஆண்டு தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழகம் வாயிலாக, 5.2 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு சமரச கடன் தீர்ப்பாயம் வாயிலாக, வட்டி அசலுடன் சேர்த்து, 32.34 கோடி ரூபாய் செலுத்தியுள்ளோம். ஆனால், தற்போது தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழகம், ஏற்கனவே கட்டிய பணம், வட்டி தொகை மட்டுமே. அசல் தொகை கட்டாததால், கூட்டுறவு சர்க்கரை ஆலையை 'ஜப்தி' செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பங்குதாரராக உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆந்திர மாநிலத்தில் இருந்து கனிமவளங்களை கடத்தி வரும் லாரிகளால், புண்ணியம் -- பொதட்டூர்பேட்டை நெடுஞ்சாலை சேதமடைந்துள்ளது. அதிக பாரங்களை ஏற்றி வரும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிப்பட்டு அரசு ம ருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால், சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். திருத்தணி தாலுகாவில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் குறிப்பிட்ட சில நெல் ரகங்களை விவசாயிகளிடம் வாங்க அதிகாரிகள் மறுக்கின்றனர். இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.