சேதமடைந்த அலுவலக கட்டடங்கள் அச்சத்தில் பணிபுரியும் வி.ஏ.ஓ.,க்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதி
திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி கோட்டத்தில், ஒன்பது தாலுகாக்கள் , 48 குறு வட்டங்கள், 792 கிராமங்கள் உள்ளன.இந்த கிராமங்களில், 250க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 750 வி.ஏ.ஓ.,க்கள் பணிபுரிந்து வருகின்றனர். வி.ஏ.ஓ.,க்கள் வருவாய் ஆவணங்களை பராமரிப்பது, நில வரி உள்ளிட்ட வரி வசூல், பிறப்பு, இறப்பு பதிவு, ஜாதி சான்று, இருப்பிடச் சான்று உட்பட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், வி.ஏ.ஓ.க்களின் பணி நியமன ஆணையில், எந்த கிராமத்தில் பணியாற்ற நியமிக்கப்படுகின்றனரோ, அதே கிராமத்தில் வசிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.ஆனால், வி.ஏ.ஓ.,க்களுக்காக கட்டப்பட்ட கட்டடங்கள் பராமரிப்பின்றி, பழுதடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளன. இதனால், முக்கிய ஆவணங்கள் மழையில் நனைந்து வீணாகி வருவதோடு, சான்றிதழ் பெற வரும் மக்களும் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். மேலும், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், பெண் வி.ஏ.ஓ.,க்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, கலெக்டர் பிரதாப் மாவட்டத்தில் உள்ள கிராம பகுதிகளில் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் மக்களும் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.