வீரபத்திர சுவாமி கோவில் வளாகம் குப்பை, வாகன நிறுத்தமான அவலம்
ஊத்துக்கோட்டை:பழமை வாய்ந்த வீரபத்திரசுவாமி கோவில் முன் குப்பை கொட்டப்பட்டும், வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும் மாறியதால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில், பேரூராட்சி அலுவலகம் அருகே வீரபத்திரசுவாமி கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவில், ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில், சிவராத்திரி உள்ளிட்ட விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படும்.இந்த கோவில் அருகே காவல் நிலையம் உள்ளது. போலீசாரால் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள், கோவில் வளாகத்தில் நிறுத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் பேரூராட்சி அலுவலகம் அருகே, மின்வாரியத் துறை ஊழியர்கள், மரக்கிளைகளை வெட்டி கோவில் முன் போட்டனர்.பேரூராட்சி நிர்வாகம், 10 நாட்களுக்கு மேலாகியும் குப்பையை அகற்றவில்லை. மேலும், கோவில் அமைந்துள்ள இடத்தை சுற்றி ஆக்கிரமிப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து, 25 ஆண்டுகளை கடந்துவிட்டது.எனவே, ஹிந்து அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு, குப்பை, பறிமுதல் வாகனங்களை அகற்றிவிட்டு, விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.