உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இரும்பு தடுப்புகளால் இடையூறு சிரமத்துடன் பயணிக்கும் வாகனங்கள்

இரும்பு தடுப்புகளால் இடையூறு சிரமத்துடன் பயணிக்கும் வாகனங்கள்

பொன்னேரி: பொன்னேரி – தச்சூர் நெடுஞ்சாலையில் தனியார் பள்ளி அருகே வைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புகளால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் பயணித்து வருகின்றனர். பொன்னேரி – தச்சூர் நெடுஞ்சாலையில் உள்ள, கிருஷ்ணாபுரம் துர்கா நகர் பகுதியில், இருபுறமும் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளன. இதனால் அப்பகுதியை கடக்கும் வாகனங்கள் மிகுந்த சிரமத்துடன் பயணிக்கின்றன. கனரக வாகனங்கள் இடது வலது என மாறி மாறி பயணிக்கும்போது, பின்னால் வரும் வாகனங்கள் தடுமாற்றம் அடைகின்றன. இதனால் விபத்து நேரிடும் அபாயம் உள்ளது. தனியார் பள்ளிக்கு சென்று வரும் வாகனங்களின் பாதுகாப்பிற்காக தடுப்புகள் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. காலை, மாலை நேரங்களில் இவற்றை வைத்து விட்டு, மற்ற நேரங்களில் அப்புறப்படுத்தினால், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு இருக்காது எனவும், அவசியம் எனில் அங்கு வேகத்தடைகளை அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனவும் பிற வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !