மோந்தா புயல் எச்சரிக்கையால் பழவேற்காடில் கண்காணிப்பு தீவிரம் படகுகள், வலைகளை பாதுகாப்பதில் மீனவர்கள் மும்முரம்
பழவேற்காடு: 'மோந்தா' புயல் எச்சரிக்கை காரணமாக, மீனவ கிராமங்களில் அரசுத் துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ள நிலையில், மீனவர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, படகுகள் மற்றும் வலைகளை பாதுகாப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி வட்டங்களில், வங்காள விரிகுடா கடல் பகுதியை ஒட்டி, 56 மீனவ கிராமங்கள் உள்ளன. கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே உள்ள நொச்சிக்குப்பம் - காட்டுப்பள்ளிகுப்பம் இடையே, 18.9 கி.மீ., நீளமுள்ள கடலோர பகுதியில், 30,000 மீனவர்கள் வசிக்கின்றனர். வங்க கடலில் உருவாகி உள்ள, 'மோந்தா' புயல் காரணமாக, பழவேற்காடு பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. கடல் அலைகள், 10 - 15 அடி உயரம் எழும்பி, கடற்கரை பகுதிகளை அரித்து செல்கிறது. கடல் அரிப்பு அதிகரித்துள்ளதால் கடற்கரைக்கும், கடலோர மீனவ கிராமங்களுக்கும் இடையேயான இடைவெளி குறைந்து, மீனவ கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், 'புயல் காரணமாக, மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்' என, அறிவுறுத்தியது. இதையடுத்து, மீனவர்கள் தங்கள் படகுகளை ஏரியின் கரையோரங்களில் நிறுத்தி, கயிறுகள் மூலம் அவற்றை பாதுகாப்பாக கட்டி வைத்துள்ளனர். கடற்கரை கிராமங்களில், டிராக்டர்கள் உதவியுடன் படகுளை கட்டி இழுத்து, கரைகளின் மேல் ஏற்றி வைக்கப்பட்டன. மீன்பிடி வலை மற்றும் உபகரணங்கள் அலை மற்றும் காற்றில் அடித்து செல்லாத வகையில், பாதுகாக்கும் பணியில் மீனவர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். பழவேற்காடு ஏரிக்கு ஆரணி, கொசஸ்தலை, பகிங்ஹாம் கால்வாய் மூலம் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், கோட்டைகுப்பம், ஆண்டிகுப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களை மழைநீர் சூழ்ந்து வருகிறது. புயல் எச்சரிக்கை காரணமாக, மீனவர்கள் தொழிலுக்கு செல்வதை தவிர்த்துள்ளதால், அவர்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. மீன்வளம், வருவாய், காவல் உள்ளிட்ட பல்வேறு துறையினர், மீனவ கிராமங்களைத் தொடர்ந்து கண்காணித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு உள்ளனர். ஆண்டார்மடம், திருப்பாலைவனம், வைரவன்குப்பம் கிராமங்களில் புயல் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. புயல் பாதிப்புகள் அதிகரிக்கும் நிலையில், மீனவ மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு, அரசுத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.