உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாற்று இடம் வழங்க எதிர்ப்பு கிராம மக்கள் முற்றுகை

மாற்று இடம் வழங்க எதிர்ப்பு கிராம மக்கள் முற்றுகை

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டியில் வீடு இழந்த குடும்பத்தினருக்கு மாற்று இடம் வழங்குவதற்காக, கோங்கல் கிராமத்தில் நில அளவை பணிகளை மேற்கொள்ள சென்ற வருவாய் துறையினரை, உள்ளூர் மக்கள் முற்றுகையிட்டு தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட வீடுகள் மற்றும் கடைகள் அகற்றப்பட்டன. வீடு இழந்த குடும்பத்தினருக்கு மாற்று இடம் வழங்குவதற்காக, கும்மிடிப்பூண்டி அருகே கோங்கல் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தில் நில அளவை பணிகளை மேற்கொள்ள, கும்மிடிப்பூண்டி தாசில்தார் சுரேஷ்குமார் தலைமையிலான வருவாய் துறையினர் நேற்று சென்றனர். தகவல் அறிந்த கோங்கல் மற்றும் குமாரநாயக்கன்பேட்டை கிராம மக்கள், நில அளவை பணி நடைபெற்ற இடத்தை முற்றுகையிட்டனர். வீட்டுமனை இல்லாத தங்கள் கிராம மக்களுக்கு, முதலில் நிலம் வழங்க வேண்டும் என, வலியுறுத்தி பேசியதால் பரபரப்பான சூழல் நிலவியது. இதனால், நில அளவை பணி ஒத்தி வைக்கப்பட்டது. 'பேச்சுவார்த்தை வாயிலாக தீர்வு காணப்படும்' என, கிராம மக்களிடம் வருவாய் துறையினர் தெரிவித்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ