உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை கிராம மக்கள், கட்சியினர் முற்றுகை

ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை கிராம மக்கள், கட்சியினர் முற்றுகை

கும்மிடிப்பூண்டி:சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, பேரணி நடத்திய பா.ம.க.,வினர், உள்ளூர் மக்களுடன் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில், 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தகவல் ஏதும் கிடைக்காததால், பொதுமக்களின் உதவியை போலீசார் நாடியுள்ளனர். அந்நபரின் புகைப் படத்தை வெளியிட்டு, தகவல் அளிப்பவர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் வெகுமதியை போலீசார் அறிவித்துள்ளனர். நேற்று பா.ம.க., மாநில பொருளாளர் திலகபாமா தலைமையில், பா.ம.க., மற்றும் புரட்சி பாரதம் கட்சியினர், 250க்கும் மேற்பட்டோர், ஆரம்பாக்கம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி, பேரணியாக சென்று காவல் நிலையத்தை முற்றுகை யிட்டனர். அப்போது, ஆரம்பாக்கம் பகுதிவாசிகளும், கட்சியினருடன் இணைந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேசிய நெடுஞ் சாலையில் மறியல் போராட்டம் மேற்கொள்ளாமல் இருக்க, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். 'அந்த நபர் விரைவில் பிடிபடுவார்' என, தெரிவித்த போலீசார், அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !