உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வினாயகர் சதுர்த்தி வெகுவிமரிசை

வினாயகர் சதுர்த்தி வெகுவிமரிசை

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று வினாயகர் சதுர்த்தி வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. திருவாலங்காடு தேரடி, சின்னம்மாப்பேட்டை, கனகம்மாசத்திரம் பஜார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், விநாயகர் சிலைகள் குவிந்து விற்பனை செய்யப்பட்டன.நேநேற்று காலை முதல் விற்பனை சூடு பிடிக்க துவங்கியது.இதில் களிமண்ணாலான சிலைகள், தண்ணீரில் எளிதில் கரையக்கூடிய காகிதக்கூழ் மூலம் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அதிகபட்சமாக, 12 அடி வரை விற்பனை செய்யப்பட்டன.களி மண்ணால் செய்யப்பட்ட சிறு விநாயகர் சிலை ரூ.60 முதல் ரூ.300 விற்பனைக்கு விற்கப்பட்டது. மேலும், ஒன்றரை அடி சிலை ரூ.100 முதல் ரூ.700 வரை விற்பனை செய்யப்படுகிறது.5 அடி காகித விநாயகர் சிலை அதிகபட்சமாக, ரூ.6 ஆயிரத்திற்கும், 12 அடி விநாயகர் சிலை ரூ.16 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல, வண்ணக்குடைகள், ரூ.10 முதல் ரூ.150 விற்பனை செய்யப்பட்டது.மேலும் ஒவ்வொரு கிராமத்திலும் வித விதமான வினாயகர் சிலைகள் வைக்கப்பட்டது.திருவாலங்காடு பெரிய தெருவில் வைக்கப்பட்ட சிக்ஸ் பேக் பிள்ளையார், தெற்கு மாட வீதியில் வைக்கப்பட்ட மான் மற்றும் குதிரை மேல் அமர்ந்திருக்கும் பிள்ளையார் மக்களை கவர்ந்தது.

பொன்னேரியில் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசை

பொன்னேரி:பொன்னேரி, சோழவரம், மீஞ்சூர், பழவேற்காடு பகுதிகளில் நேற்று, விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. பொன்னேரி என்.ஜி.ஓ., நகர் பாலவிநாயகர் கோவில், திருவேங்கிடபுரம் செல்வ விநாயகர் கோவில், வேண்பாக்கம் வரசித்தி விநாயகர், திருவாயற்பாடி குளக்கரை விநாயகர் கோவிகளில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனைகள் நடைபெற்றன.அதிகாலை முதல், பக்தர்கள் கோவில்களில் குவிந்தனர். விநாயக பெருமானை நெஞ்சுருக வணங்கி, விநாயகர் துதிபாடி வழிபட்டனர்.பொன்னேரி திருவேங்கிடபுரம் பொன்னியம்மன் கோவில், தடப்பெரும்பாக்கம் லட்சுமியம்மன் கோவில்களில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் வைத்து பக்தர்கள் வழிபட்டனர்.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி எம்.எஸ்.ஆர்., கார்டன் லட்சுமி கணபதி, முனுசாமி நகர் சித்தி விநாயகர், பெரியார் நகர் செல்வ விநாயகர், குளக்கரை வரசித்தி விநாயகர், ஜெய்ஹிந்த் நகர் செல்வ கணபதி கோவில்களில், நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைத்து கோவில்களிலும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டன.கும்மிடிப்பூண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில், பொது இடங்களில், 190 பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து அந்தந்த விழா குழுவினர் சிறப்பு வழிபாடுகள் நடத்தி, அன்னதானம் வழங்கினர்.பஜார் பகுதிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, சிறிய அளவிலான வண்ண விநாயகர் மற்றும் களிமண் விநாயகர் சிலைகளை மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்று வீட்டில் வைத்து வழிபட்டனர்.பெரியார் நகர் செல்வ விநாயகர் மற்றும் ஜெய்ஹிந்த நகர் செல்வ கணபதி கோவில்களில் நேற்று இரவு, திருவீதி உலா நிகழ்வு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வாசலில் மாக்கோலமிட்டு, விநாயகரை வரவேற்று, பூஜை செய்தனர்.

திருத்தணியில் விநாயகர் சதுர்த்தி விழா: கோவில்களில் சிறப்பு பூஜை

திருத்தணி:நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப் பட்டது. திருத்தணி அரக்கோணம் சாலையில் உள்ள முக்கண் விநாயகர், ம.பொ.சி. சாலையில் உள்ள சுந்தர விநாயகர், பைபாஸ் சாலையில் செல்வ விநாயகர், பழைய பஜார் தெரு வரசித்தி விநாயகர், சேகர்வர்மா நகரில் உள்ள சக்திவிநாயகர் கோவில், சித்துார் சாலையில் உள்ள விநாயகர் கோவில் உள்பட திருத்தணி நகரம் மற்றும் கிராமங்களில் உள்ள விநாயகர் கோவில்களில் மூலவருக்கு சிறப்பு அபிேஷகம்,அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. அதே போல், திருத்தணி தாலுகாவில் உள்ள அனைத்து கிராமங்களில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. அப்போது சர்க்கரை பொங்கல், சுண்டல், கொழுக்கட்டை, அருகம்புல், பொறி மற்றும் பழவகைகள் படைத்து வழிப்பட்டனர். சில கோவில்களில் பக்தர்களுக்கு அன்னதானம், புளியோதரை, சர்க்கரை பொங்கல், சுண்டல், கேசரி போன்ற பிரசாதங்கள் வினியோகம் செய்யப்பட்டது. திருத்தணி பஜாரில் சிறிய அளவில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர்கள் சிலைகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்று வீடுகளில் வைத்து வழிப்பட்டனர்.ஊர்வலம்விநாயகர் சதுர்த்தி ஒட்டி உற்சவர் சுந்தர விநாயகர் அலங்கரிக்கப்பட்ட டிராக்டரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, திருத்தணி நகர் முழுவதும் வீதியுலா வந்தது. அப்போது பெண்கள் தேங்காய் உடைத்து பூஜை செய்து வழிப்பட்டனர்.

கடம்பத்துாரில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்

கடம்பத்துார்:இந்துக்களின் முக்கிய பண்டிகைளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. வயது வித்தியாசம் பாராமல் இந்த பண்டிகையை இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடி வருகின்றனர். அத்தகைய பண்டிகை நேற்று மாவட்டம் முழுதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில், உள்ள அனைத்து விநாயகர் கோவிலில் நேற்று காலை முதல் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடந்தது. அதன்பின், அந்தந்த பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட விநாயகர் கோவில்களில் நேற்று சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடந்தது. இதில் பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோவிலில் காலை 08.00 மணியளவில் விநாயகருக்கு விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து காலை 08.30 மணியளவில் பாதாம், முந்திரி,உலர்திராட்சை, கிவி, செர்ரி பழங்கள் கொண்டு சிறப்பு அலங்காரத்தில் கரும்புகளால் சூழப்பட்ட நின்ற கோலத்தில் விநாயகர் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடம்பத்துார், மப்பேடு, வெள்ளவேடு, மணவாளநகர், திருவள்ளூர் தாலுகா, நகரம், செவ்வாப்பேட்டை, புல்லரம்பாக்கம் ஆகிய காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் நேற்று 183 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. அனைத்து சிலைகளும் அருகில் உள்ள நீர்நிலைகளில் நாளை 9ம் தேதி கரைக்கப்படும் என சம்பந்தப்பட்ட காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

வினாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்

ஊத்துக்கோட்டை: வினாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி, ஊத்துக்கோட்டை அண்ணாதுரை சிலை அருகில், செல்வ வினாயகர் கோவிலில், காலை மூலவருக்கு பால், தயிர், தேன், மஞ்சள் மற்றும் பஞ்சாமிர்தம் தேன் உள்ளிட்ட அபிேஷகப் பொருட்களால் சிறப்பு அபிேஷக, ஆராதனை மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக, மூலவருக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டது. ஊத்துக்கோட்டை கண்ணதாசன் நகர், போலீஸ் நிலைய பின்புறம் சாலை, நாகலாபுரம் சாலை, ரெட்டித் தெரு, தொம்பரம்பேடு, தாராட்சி உள்ளிட்ட ஒவ்வொரு கிராமங்களிலும் மற்றும் அதன் தெருக்களிலும் வினாயகர் சிலைகள் வைத்து பொதுமக்கள் வழிபட்டனர். அவல், பொறி, கடலை, பழ வகைகள், சாத வகைகள் வைத்து வழிபட்டனர். ஊத்துக்கோட்டை உட்கோட்டம், ஊத்துக்கோட்டை, பென்னலுார்பேட்டை, பெரியபாளையம், வெங்கல், ஆரணி ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்குள், மொத்தம், 220 வினாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும், 50க்கும் மேற்பட்ட சிலைகள அந்தந்த நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. மீதியுள்ள சிலைகள் நாளை, 9ம் தேதி மற்றும், ஐந்தாம் நாளான வரும், 11ம் தேதி கரைக்கப்பட உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை