பூண்டி நீர்த்தேக்கத்தில் தண்ணீர் திறப்பு
ஊத்துக்கோட்டை:பூண்டி சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கத்தில் இருந்து செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை ஆற்றின் நடுவே, பூண்டி கிராமத்தில் உள்ளது சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கம். இதன் கொள்ளளவு, 3.23 டி.எம்.சி., நீர்மட்டம், 35 அடி. மழைநீர் மற்றும் கண்டலேறு அணையில் இருந்து சாய்கங்கை கால்வாய் வாயிலாக பெறப்படும் கிருஷ்ணா நீர் முக்கிய நீர் ஆதாரம். தெலுங்கு கங்கை ஒப்பந்தப்படி கடந்த மே, 24ம் தேதி முதல் தமிழகத்திற்கு கிருஷ்ணா நீர் வந்து கொண்டு இருக்கிறது. தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோபாயின்ட் வழியே, பூண்டி சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் செல்கிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக, இணைப்பு கால்வாய் வழியே புழல் நீர்த்தேக்கத்திற்கு சென்று கொண்டு இருக்கிறது. நேற்று காலை, செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு, 250 கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, இதன் கொள்ளளவு, 2.38 டி.எம்.சி., நீர்மட்டம், 32.50 அடி. கிருஷ்ணா நீர் வினாடிக்கு, 90 கன அடி வீதம் வந்து கொண்டு இருக்கிறது. இணைப்பு கால்வாய் வாயிலாக வினாடிக்கு, 150 கன அடி நீர் சென்னை புழல் நீர்த்தேக்கத்திற்கும், 250 கன அடி செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திற்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.