உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிறிய ஜவுளி பூங்கா அமைப்பதில் பள்ளிப்பட்டு நெசவாளர்கள் ஆர்வம் ஒரே கூரையின் கீழ் நெசவு மேற்கொள்ள வாய்ப்பு

சிறிய ஜவுளி பூங்கா அமைப்பதில் பள்ளிப்பட்டு நெசவாளர்கள் ஆர்வம் ஒரே கூரையின் கீழ் நெசவு மேற்கொள்ள வாய்ப்பு

பள்ளிப்பட்டு, பள்ளிப்பட்டு, ஆர்.கே. பேட்டை, திருத்தணி ஒன்றியங்களில் விசைத்தறி நெசவு தொழிலில் ஈடுபட்டு வரும் நெசவாளர்கள், அரசு மானியத்துடன் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் வாயிலாக, நசிந்து வரும் விசைத்தறி நெசவு, ஒரே கூரையின் கீழ் புதிய வளர்ச்சியை எட்ட முடியும் என்ற நம்பிக்கை நெசவாளர்கள் இடையே ஏற்பட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில், ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, திருத்தணி, மாதர்பாக்கம், நரசிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பாரம்பரியமாக நெசவு தொழில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கைத்தறிகளில், லுங்கி, சேலை, வேட்டி, துண்டு உள்ளிட்டவை நெசவு செய்யப்பட்டு வந்தன. கைத்தறி துணி ரகங்களுக்கு என்றுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.ஆனால், கைத்தறி நெசவு செய்ய இளைஞர்கள் முன்வருவது இல்லை. இதனால், 25 ஆண்டுகளாக கைத்தறி நெசவை கைவிட்டு, விசைத்தறி நெசவில் நெசவாளர்கள் ஈடுபடத் துவங்கினர்.விசைத்தறி நெசவை, தங்களின் வீடுகளில் ஒரு பகுதியில் தறிக்கூடம் அமைத்து நடத்தி வருகின்றனர். உள்ளூர் முகவர்களிடம் இருந்து நுால் பெற்றுக்கொண்டு, கூலிக்கு அவற்றை துணியாக நெய்து கொடுக்கின்றனர்.இந்த முறையில், கூலி உயர்வு முறையாக இல்லை எனக்கூறி, 15 ஆண்டுகளாக நெசவாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வருவாய்த் துறையினர் தலையிட்டு நெசவாளர்கள் மற்றும் உள்ளூர் முகவர்களிடையே சமரச பேச்சு நடத்தி தீர்வு காண்பதும் வழக்கமாக உள்ளது.விசைத்தறி நெசவு தொழிலில் வருவாய்க்கு உத்தரவாதம் இல்லாத சூழல் மற்றும் நுால் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகளால் தொழில் நசிந்து வருகிறது.இதனால், திருத்தணியை தலைமையிடமாகக் கொண்டு அரசு ஜவுளிப்பூங்கா அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசு சார்பில் நெசவாளர்களுக்கு நுால் வழங்க வேண்டும் என, 15 ஆண்டுகளாக நெசவாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்நிலையில், சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்க மானியம் அளிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. 50 சதவீதம் மானியம் அல்லது ரூ.2.5 கோடி இதில் எது குறைவோ அந்த தொகை மானியமாக அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்க தொழில் முனைவோருக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது. உள்கட்டமைப்பு, தொழிற்சாலைக்கான கட்டடங்கள் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில், மூன்று ஜவுளி உற்பத்தி கூடங்களுடன் அமைக்கப்பட வேண்டும்.இதன் வாயிலாக ஒரே கூரையின் கீழ், பாவு தயாரித்தல், நுால் நுாற்பு, நெசவு உள்ளிட்ட அனைத்து வேலைகளும் மேற்கொள்ளப்படும். இதன் வாயிலாக வேலைவாய்ப்பு பெருகும், அன்னிய செலாவணி ஈட்டவும் வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதன்படி பள்ளிப்பட்டு அடுத்த வெங்கம்பேட்டையில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

ஒருங்கிணைப்பு எளிது

நடைமுறையில் உள்ள நெசவு உற்பத்தியில், விசைத்தறி கூடம், பாவு தயாரிப்புக் கூடம், பசை சேர்த்தல் உள்ளிட்ட பணிகள் தனித்தனியே பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.இவற்றை ஒருங்கிணைப்பதில் காலதாமதம், பண விரயம் அதிகளவில் ஏற்படுகிறது. கட்டுமானம் மற்றும் மின்வினியோகம் உள்ளிட்டவற்றிலும் சிக்கல் ஏற்படுகிறது. ஆனால், ஜவுளிப்பூங்காவில் அனைத்து பணிகளும் ஒரே இடத்தில் மேற்கொள்ளப்படுவதால், நேர்த்தியாக பணிகளை மேற்கொள்ள முடியும் என்பது சிறப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை