புது ரேஷன் கடை கட்டடம் திறப்பு விழா எப்போது?
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் வேணுகோபாலபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ராமலிங்காபுரம் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.தற்போதுள்ள ரேஷன் கடை கட்டடம் பழுதடைந்து உள்ளதால், மழைக்காலத்தில் பொருட்கள் நனைந்து பாழாகி வருகிறது. எனவே, புதிய ரேஷன் கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்தனர்.இதையடுத்து, அரசு துவக்கப் பள்ளி அருகே, 2024 ---- 2025ம் ஆண்டுக்கான, திருவள்ளூர் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 7 லட்சம் ரூபாய் மதிப்பில், ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டது.அனைத்து கட்டுமான பணிகளும் முடிந்து, மூன்று மாதங்களுக்கு மேலாகியும் ரேஷன் கடை திறக்கப்படாமல் உள்ளது. இதனால், பகுதிவாசிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, புதிய ரேஷன் கடையை விரைந்து திறக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.