நிரம்பியது லட்சுமிபுரம் அணைக்கட்டு வினாடிக்கு 2,000 கனஅடி உபரிநீர் வெளியேற்றம்
பொன்னேரி:ஆந்திர மாநிலம், நாராயணவனம் பகுதியில் உள்ள சதாசிவகொண்டா மலைப்பகுதியில் உருவாகும் ஆரணி ஆறு பிச்சாட்டூர், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம். பொன்னேரி, தத்தமஞ்சி கிராமங்கள் வழியாக, 127 கி.மீ., பயணித்து, பழவேற்காடு உவர்ப்பு நீரில் கலந்து, வங்காள விரிகுடா கடலில் முடிகிறது.பொன்னேரி அடுத்த லட்சுமிபுரம் பகுதியில், ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு உள்ளது. அணைக்கட்டில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர், பெரும்பேடு, காட்டூர், தத்தமஞ்சி ஏரிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக அங்கு இருபுறமும், ஆறு ஷட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன.இந்த அணைக்கட்டு, 0,14டி.எம்.சி. கொள்ளளவை கொண்டதாகும். கடந்த, 15, 16 ஆகிய தேதிகளில் பெய்த கன மழையால், ஆற்றிற்கு நீர்வரத்து அதிகரித்தது.தொடர்ந்து நீர்வரத்து இருந்ததால் நேற்று அணைக்கட்டு நிரம்பி வழிந்தது. அணைக்கட்டில் இருந்து, வினாடிக்கு, 2,000 கன அடி உபரிநீர் ரெட்டிப்பாளையம் தடுப்பணையை நோக்கி ஆர்ப்பரித்து செல்கிறது.பல்வேறு பகுதிகளில் இருந்து ஆற்றிற்கு நீர்வரத்து தொடர்ந்து இருக்கும் நிலையில், உபரிநீர் அளவு மேலும் அதிகரிக்க வாயப்பு உள்ளது.மேலும், அணைக்கட்டின் இருபுறமும் உள்ள ஷட்டர்கள் திறக்கப்பட்டு, வினாடிக்கு, 100 கனஅடி தண்ணீர் வெளியேற்றி, பெரும்பேடு, காட்டூர் ஏரிகளுக்கு அனுப்பப்படுகிறது.அணைக்கட்டு நிரம்பியதால், ஆற்றின் கரையோர பகுதிகளை நீர்வளத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.