பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர் நியமிப்பது எப்போது? நோயாளிகள் பரிதவிப்பு
பொன்னேரி, பொன்னேரி அரசு மருத்துவமனையில் இதய நோய், சிறுநீரகம் தொடர்பான சிகிச்சைகளுக்கு சிறப்பு மருத்துவர்கள் இல்லாததால், சென்னை மற்றும் திருவள்ளூருக்கு நோயாளிகள் செல்லும் அவலநிலை நீடிக்கிறது. பொன்னேரி தாலுகா அரசு பொது மருத்துவமனையில், தினமும், 700 - 900 புறநோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இங்கு, பொது மருத்துவம், மகப்பேறு, இ.என்.டி, ஆகியவற்றிற்கு சிறப்பு மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் உள்ளனர். அதேசமயம், இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிறப்பு மருத்துவர்கள் இல்லை. இதனால், பாதிப்பிற்கு உள்ளாகும் நோயாளிகள், சென்னை அரசு மருத்துவமனைகளுக்கும், திருவள்ளூர் மாவட்ட மருத்துவமனைக்கும் பரிந்துரைக்கப்படுகின்றனர். இதனால், நோயாளிகள் 40 - 60 கி.மீ., பயணித்து சிகிச்சை பெறும் நிலை உள்ளது. அவசர சிகிச்சை பிரிவு இருந்தும், மேற்கண்ட நோய்களுக்கான மருத்துவர்கள் இல்லாதது, நோயாளிகள் மற்றும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பொன்னேரி தாலுகா தலைமை மருத்துவனைமயாக இருப்பதால், இதய நோய், சிறுநீரகம் உள்ளிட்ட நோய்களுக்கு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களை நியமிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.