விதிமீறி இயங்கும் ஆட்டோக்கள் நடவடிக்கை எடுப்பது எப்போது?
ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டையில் ஷேர் ஆட்டோக்களில், அதிகளவில் பயணியரை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.தமிழக - ஆந்திர எல்லையில் ஊத்துக்கோட்டை பேரூராட்சி அமைந்துள்ளது. இதைச் சுற்றி, 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அத்தியாவசிய தேவைக்கு தினமும் ஏராளமானோர், ஊத்துக்கோட்டை சென்று வருகின்றனர்.ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, இப்பகுதியில் இயக்கப்படும் அரசு பேருந்துகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை.இதனால், இப்பகுதியில் ஷேர் ஆட்டோக்கள் அதிகமாக இயக்கப்படுகின்றன. ஊத்துக்கோட்டையில் இருந்து பெரியபாளையம், சீத்தஞ்சேரி, சத்தியவேடு, நாகலாபுரம் மார்க்கங்களில் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.இங்குள்ள ஷேர் ஆட்டோக்களில் அதிகளவில் பயணியர் ஏற்றிச் செல்லப்படுகின்றனர். ஏதேனும் விபத்து ஏற்பட்டால், உயிர்ச்சேதம் அதிகளவு ஏற்படும். மேலும், ஷேர் ஆட்டோக்களுக்கு பர்மிட், இன்சூரன்ஸ், ஓட்டுநருக்கு லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் உள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.எனவே, மாவட்ட போக்குவரத்துத் துறை அதிகாரிகள், ஊத்துக்கோட்டையில் இயங்கும் ஷேர் ஆட்டோக்களின் உரிமை, லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்து, அதிகளவு பயணியரை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துஉள்ளனர்.