ஆரணி ஆற்றின் குறுக்கே பாலம் அமைவது எப்போது?: 6 கி.மீ., சாலை சேதமானதால் கிராமத்தினர் தவிப்பு
பொன்னேரி:திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த காட்டூர் கிராமத்தில் இருந்த அபிராமபுரம், கடப்பாக்கம், சிறுபழவேற்காடு, ஆண்டார்மடம் கிராமங்கள் வழியாக பழவேற்காடு செல்லும் சாலை உள்ளது.இந்த சாலையில், ஆண்டார்மடம் கிராமத்தில் ஆரணி ஆற்றின் குறுக்கே, சிமென்ட் உருளைகள் பதிக்கப்பட்ட தரைப்பாலம் இருந்தது.இந்த கிராமங்களை சேர்ந்த கிராமவாசிகள் பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கும், அத்தியாவசிய தேவைகளுக்கு பொன்னேரிக்கும் சென்று வர, இந்த வழியை பயன்படுத்தி வந்தனர்.மீஞ்சூர், தத்தமஞ்சி, காட்டூர் ஆகிய பகுதிகளில் உள்ள மீன் வியாபாரிகளும், இந்த தரைப்பாலம் வழியாக பழவேற்காடு மீன் மார்க்கெட் சென்று வருவர்.கடந்தாண்டு 'மிக்ஜாம்' புயல் மழையின்போது, ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ஆண்டார்மடம் கிராமத்தில் தரைப்பாலமும், சாலையும் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டன. தரைப்பாலம் இருந்த பகுதி வழியாக ஆற்று நீர் ஆர்ப்பரித்து சென்றதால், போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. கிராமவாசிகள் மற்றும் மீன் வியாபாரிகள், 8 - 10 கி.மீ., தொலைவு சுற்றிக்கொண்டு வஞ்சிவாக்கம் வழியாக, பழவேற்காடு மற்றும் பொன்னேரி பகுதிக்கு சென்று வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் இதே நிலை தான் உள்ளது.தற்போது, தரைப்பாலம் இருந்த பகுதி முழுதும் மண்ணைகொட்டி, ஆற்று நீர் செல்லும் வழித்தடம் மூடப்பட்டு, தற்காலிக சாலை அமைக்கப்பட்டு உள்ளது.வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள சாலையை வெட்டி எடுக்க வேண்டிய நிலையும் ஏற்படும். மேலும், கிராமவாசிகளின் போக்குவரத்திற்கு பாதிக்கப்படும்.இங்கு, உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என, கிராமவாசிகள் தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை இன்றி உள்ளது.காட்டூர் சாலையில் இருந்து ஆண்டார்மடம் வழியாக பழவேற்காடு செல்லும், 6 கி.மீ., தொலைவு சாலை சேதமடைந்துள்ளது. சாலை முழுதும் பள்ளங்கள் ஏற்பட்டும், சரளை கற்கள் பெயர்ந்தும், போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்குகிறது.கடைசியாக சாலை, 2014ல் புதுப்பிக்கப்பட்டது. அதன்பின், சீரமைக்கும் பணி நடைபெறவில்லை. சிறுபாலங்கள் ஓட்டை உடைசலுடன் உள்ளன. ஒரு சில இடங்களில் மண்சாலையாக மாறியுள்ளது.இந்த வழித்தடத்தில் பேருந்து போக்குவரத்து இல்லாத நிலையில், கிராமவாசிகள் இருசக்கர வாகனங்களையே நம்பி உள்ளனர். சேதமடைந்துள்ள சாலையால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி தவிக்கின்றனர்.இந்த சாலை ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து, 2022ல், மாநில நெடுஞ்சாலை துறையிடம், இதர மாவட்ட சாலைகள் பிரிவில் ஒப்படைக்கப்பட்டது.இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில், தற்போது வரை மாநில நெடுஞ்சாலைத்துறையும் சாலையை சீரமைக்க எந்தவொரு நடவடிக்கை எடுக்கவில்லை.பாலமும் இல்லாமல், சாலையும் சேதமடைந்து இருப்பதால், கிராமவாசிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.மீஞ்சூர், சோழவரம் ஒன்றியங்களில், 150க்கும் மேற்பட்ட ஒன்றிய சாலைகள், நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. அவற்றை சீரமைக்க படிப்படியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதுவரை, 30 சாலைகள் சீரமைக்கப்பட்டு உள்ளன. மேற்கண்ட சாலையின் நிலை குறித்து, அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம். விரைவில் நிதி ஒதுக்கீடு பெற்று சாலை மற்றும் பாலம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.நெடுஞ்சாலை துறை அதிகாரி,திருவள்ளூர்.