முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக ஆண்டார்குப்பத்தில் விடுதி அமைக்கப்படுமா?
பொன்னேரி:பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்தில், பிரசித்தி பெற்ற பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. பரணி நட்சத்திர நாளன்று கோவிலுக்கு வரும் பக்தர்கள், அன்றிரவு முருகனை தரிசித்து, அங்கேயே தங்கி, மறுநாள் கிருத்திகை நாளில் முருகனை தரிசித்து செல்கின்றனர்.இரவு நேரத்தில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி வசதிகள் இல்லாததால் சிரமப்படுகின்றனர். அதேபோல், இக்கோவிலில் சுபமுகூர்த்த நாட்களில், 10 - 15க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறுகின்றன. திருமண வீட்டார்கள் முகூர்த்த நாட்களுக்கு, ஒருநாள் முன்னதாக கோவிலுக்கு வந்து தங்க திட்டமிடுகின்றனர்.ஆனால், விடுதி வசதிகள் இல்லாததால், அவர்களும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதேபோல், வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காக இரவு தங்கும் பக்தர்களும், தங்குவதற்கு இடமில்லாமல் தவிக்கின்றனர்.இக்கோவிலுக்கு சொந்தமாக ஆண்டார்குப்பத்தில் நிலங்கள் உள்ளன. அவற்றில் தங்கும் விடுதிகளை அமைத்தால் பக்தர்கள் மற்றும் திருமணம் நடத்துவோருக்க பயனுள்ளதாக இருக்கும். எனவே, ஆண்டார் குப்பம் பாலசுப்ரமணி கோவிலில், பக்தர்கள் தங்க விடுதி வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.