உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கூடுதல் கவுன்டர் அமைக்கப்படுமா? : மக்கள் எதிர்பார்ப்பு
திருவாலங்காடு:'உங்களுடன் ஸ்டாலின்' முகாமிற்கு மக்கள் கூட்டம் அதிகம் வருவதால், கூடுதலாக ஆதார் மற்றும் இ- - சேவை மைய கவுன்டர்களை ஏற்படுத்த வேண்டும்' என, மக்கள் எதிர்பார்க்கின்றனர். திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்து வருகிறது. அதன்படி, இரண்டு கட்டமாக முடிந்துள்ள முகாம், மூன்றாம் கட்டமாக தொடர்ந்து நடக்கிறது. இம்முகாம் வரும் 14ம் தேதி வரை நடக்கிறது. திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜாகீர்மங்கலம், முத்துக்கொண்டாபுரம், சின்னம்மாபேட்டை, களாம்பாக்கம், திருவாலங்காடு, கனகம்மாசத்திரம் உட்பட 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் முகாம் நடந்தது. தற்போது, நல்லாட்டூர், பூனிமாங்காடு, அருங்குளம் பகுதியில், வரும் 9 மற்றும் 14ம் தேதி நடக்க உள்ளது. இந்த முகாமில் பங்கேற்போர், அதிகளவில் மனு அளித்து வருகின்றனர். குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகை கேட்டு நுாற்றுக்கணக்கான பெண்கள் மனு அளிக்கின்றனர். அதேபோல, ஆதார் மையங்கள் மற்றும் இ- - சேவை மையங்களில், பல்வேறு சேவைகளை பெறவும் மக்கள் அதிகளவில் வருகின்றனர். குறிப்பாக, கைக்குழந்தைகளுடன் வரும் பெண்கள் அதிக நேரம் காத்திருக்கின்றனர். ஆதாரில் திருத்தம் செய்தல், குழந்தைகளுக்கு ஆதார் எடுத்தல் உள்ளிட்ட சேவைகளை ஆதார் மைய கவுன்டரிலும், பட்டா மாறுதல், வாரிசு சான்று, ஜாதி சான்று உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்பிக்க, இ - -சேவை மைய கவுன்டரிலும் ஏராளமானோர் காத்திருக்கின்றனர். இந்த இரு கவுன்டர்களிலும், தலா இரண்டு பணியாளர்கள் மட்டுமே இருப்பதால், சேவைகளை பெற பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, கூடுதல் பணியாளர்களை நியமித்து, சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.