உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இரண்டு வாரத்தில் ஆடி மாத விழா துவக்கம் பெரியபாளையத்தில் சாலை அமைக்கப்படுமா?

இரண்டு வாரத்தில் ஆடி மாத விழா துவக்கம் பெரியபாளையத்தில் சாலை அமைக்கப்படுமா?

ஊத்துக்கோட்டை:ஆடி மாதம் பிறக்க இன்னும் இரண்டு வாரம் உள்ள நிலையில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி, ஆக்கிரமிப்பை அகற்ற சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஜனப்பன்சத்திரம் - ஊத்துக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் பெரியபாளையம் அமைந்துள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற பவானியம்மன் கோவில் உள்ளது.பழமை வாய்ந்த இக்கோவிலில் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ஆந்திராவில் பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் சென்று வருகின்றனர்.சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம், பிச்சாட்டூர், புத்துார், திருப்பதி, கடப்பா, கர்நுால், நந்தியால், ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள், பெரியபாளையம் வழியே செல்கின்றன. தினமும், 20,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் இச்சாலையில் பயணிக்கின்றன.பவானியம்மன் கோவிலில் நடைபெறும் விழாக்களில், ஆடி மாதம் நடைபெறும் விழா சிறப்பு வாய்ந்தது. ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை துவங்கி, 14 வாரங்கள் சிறப்பு பூஜை நடைபெறும். ஒவ்வொரு சனி, ஞாயிறு ஆகிய நாட்களில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் தங்கி, தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவர்.வரும் 17ம் தேதி ஆடி மாதம் துவங்க உள்ளது. இப்பகுதியில் ஆக்கிரமிப்பு மற்றும் சேறும், சகதியுமான சாலை உள்ளதால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிப்படுகின்றனர்.எனவே, பெரியபாளையம் பகுதியில் கலெக்டர் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பை அகற்றி, சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை