உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவாலங்காடில் இருதரப்பினர் மோதலால் பீதி சுமுக தீர்வு ஏற்படுத்துமா மாவட்ட நிர்வாகம்?

திருவாலங்காடில் இருதரப்பினர் மோதலால் பீதி சுமுக தீர்வு ஏற்படுத்துமா மாவட்ட நிர்வாகம்?

திருவாலங்காடு, கோவில் திருவிழா, காதல் விவகாரம், சுபநிகழ்வுகள் என, திருவாலங்காடில், இரு சமூகத்தினரிடையே இரண்டு ஆண்டுகளில், 13 முறை மோதல் நடந்துள்ளது. நேற்று முன்தினமும் மோதல் அரங்கேறியுள்ளது. தொடரும் மோதலுக்கு, மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும் என, பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.திருவாலங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட சன்னிதி தெரு மற்றும் பெரிய தெருவில், இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த, 1,500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இவர்களிடையே, இரண்டு ஆண்டுகளாக கோவில் திருவிழா, ஜாத்திரை விழா, காதல் விவகாரம் என, இருதரப்பினரிடையே, 13 முறை மோதல் நடந்துள்ளது. இது தொடர்பாக, 30க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவாகியுள்ளது.

மீண்டும் மோதல்

சன்னிதி தெருவைச் சேர்ந்தவர் பிரசாந்த், 23. இவர், இம்மாதம் 8ம் தேதி, பெரிய தெருவில் வசிக்கும் மூதாட்டி வீட்டிற்கு சென்று, 'உன் பேத்தி எங்கே; திருமணம் செய்ய அழைத்து போக வந்துள்ளேன்' எனக்கூறி தாக்கியதாக கூறப்படுகிறது.இதுகுறித்து மூதாட்டி, திருவாலங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பிரசாந்த் தலைமறைவானார்.நேற்று முன்தினம் இரவு, 'பிரசாந்த் எங்கே உள்ளான்' எனக் கேட்டு, சன்னிதி தெருவைச் சேர்ந்த பிரசாந்தின், 17 வயது நண்பரை, பெரிய தெருவைச் சேர்ந்த பார்த்தசாரதி, 22, லோகேஷ், 23, ஆகியோர் தாக்கியுள்ளனர்.இதுகுறித்து, தன் உறவினர்களிடம் அப்பகுதி சிறுவன் கூறியதை தொடர்ந்து, அந்த வழியாக வந்த பார்த்தசாரதியின் உறவினரான சோமசுந்தரம், 28, என்பவரை, சன்னிதி தெருவைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தாக்கினர்.சோமசுந்தரத்தின் தலையில் வெட்டுப்பட்ட நிலையில், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இருதரப்பினர் அளித்த புகாரின்படி, சன்னிதி தெருவைச் சேர்ந்த ஸ்ரீராம், 22, பாலாஜி, 23, விக்னேஷ், 22, உட்பட ஏழு பேர்; பெரிய தெருவைச் சேர்ந்த கார்த்திக், 25, உட்பட ஆறு பேர் என, மொத்தம் 13 பேர் மீது வழக்கு பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

சாலை மறியல்

இதில், சன்னிதி தெருவைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பெரிய தெருவைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.சம்பவத்தில் தொடர்பு இல்லாதவர்கள் மீதும், போலீசார் வழக்கு பதிந்துள்ளதாக கூறி, சன்னிதி தெருவைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில், தேரடி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், நேற்று காலை 8:00 - 8:30 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:இரு தரப்பினரிடையே மோதல் தொடர்வதால், இளைஞர்கள் மற்றும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இனி வரும் காலங்களில், பிரச்னை ஏற்படாத வகையில், மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும். திருத்தணி ஆர்.டி.ஓ., தலைமையிலான பேச்சு நடத்தி, சுமுகமாக செல்ல அறிவுறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை