நெடுஞ்சாலை துறையின் ஆய்வு மாளிகை கூடுதல் அறைகளுடன் புதுப்பிக்கப்படுமா?
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி, ஜி.என்.டி., சாலையில், 1.5 ஏக்கர் பரப்பளவில் மாநில நெடுஞ்சாலை துறையின், உதவி கோட்ட பொறியாளர் அலுவலக வளாகம் அமைந்துள்ளது. அதில், 38 ஆண்டுகள் பழமையான அலுவலகம் மற்றும் ஆய்வு மாளிகை உள்ளன.தனித்தனியாக இரு அறைகள் கொண்ட ஆய்வு மாளிகை, தற்போது பாழடைந்து கிடக்கிறது. ஒரு அறை கிடங்காகவும், மற்றொரு அறை அலுவலக பயன்பாட்டிற்காகவும் உள்ளன.பொதுவாக ஆய்வு மாளிகை என்பது, அரசு துறை சார்ந்த அலுவலர்கள், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் ஓய்வு எடுக்கும் இடமாக பயன்படுத்தப்படும். ஆனால், கும்மிடிப்பூண்டியில் உள்ள ஆய்வு மாளிகை பல ஆண்டு காலமாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.சட்டசபை தொகுதியின் தலைமையிடம் மற்றும் தொழில் நகரமான கும்மிடிப்பூண்டியில், கூடுதல் அறைகள் கொண்ட நவீனமயமான புதிய ஆய்வு மாளிகை நிறுவ வேண்டும்.மேலும், பாழடைந்த நிலையில் உள்ள உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தையும் இடித்து, புதிய கட்டடம் நிறுவ அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.