மேலும் செய்திகள்
ஆந்திர மாநில எல்லையில் செயல்படாத, ‛அவுட்போஸ்ட்'
19-Apr-2025
ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், ஒரு எல்லையில் மட்டும் சோதனைச்சாவடி உள்ள நிலையில், மற்றொரு எல்லையிலும் சோதனைச் சாவடி அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது ஊத்துக்கோட்டை பேரூராட்சி. தமிழக ஆந்திர எல்லையில் உள்ள இப்பகுதியில் உள்ள பஜார் வழியே தினமும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன.ஊத்துக்கோட்டை பேரூராட்சி, அண்ணாநகர் பகுதியில் தமிழக - ஆந்திர எல்லையில் போலீஸ் சோதனைச் சாவடி உள்ளது. ஆந்திராவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள் இங்கு சோதனை செய்யப்பட்ட பின் தமிழகத்திற்கு அனுமதிக்கப்படுகிறது.இங்கு வாகனங்கள் சோதனை செய்யப்படுவதில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, கஞ்சா கடத்தி வரும் போது பிடிபடுகிறது. மேலும், செம்மர கட்டைகள் கடத்துவதும் அவ்வப்போது பிடிபடுகிறது.இதேபோல், இங்குள்ள சத்தியவேடு சாலையில் தமிழக - ஆந்திர எல்லை உள்ளது. இச்சாலை வழியே சத்தியவேடு, தடா, சூளூர்பேட்டை, வரதயபாளையம், நெல்லுார், காளஹஸ்தி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றன. ஆனால் இச்சாலையில் போலீஸ் சோதனைச் சாவடி இல்லை.இதனால் இச்சாலை வழியே செம்பரம், குட்கா பொருட்கள், கஞ்சா உள்ளிட்டவை கடத்தும் சம்பவங்கள் எவ்வித தடையும் இன்றி நடக்கின்றன. எனவே, மாவட்ட எஸ்.பி., உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஊத்துக்கோட்டை - சத்தியவேடு சாலையில் போலீஸ் சோதனைச் சாவடி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆந்திராவில் இருந்து சவுடு, கிராவல் மண் ஏற்றிக் கொண்டு, 24 மணி நேரமும் சத்தியவேடு சாலை வழியே ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு செல்கின்றன. காலை 6:00 - 11:00 மாலை, 6:00 மணிக்கு மேல் மணல் லாரிகள் செல்ல மாவட்ட கலெக்டர் பிரதாப் தடை விதித்தார். ஆனால் தடை செய்யப்பட்ட நேரங்களில் மண் ஏற்றி கொண்டு லாரிகள் செல்கின்றன. சோதனைச் சாவடி இருந்தால் மண் லாரிகளையும் கட்டுப்படுத்தலாம்.
19-Apr-2025