உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நெசவு தொழிலை கைவிட்ட நெசவாளர் சமையல் வேலைக்கு செல்லும் அவலம்

நெசவு தொழிலை கைவிட்ட நெசவாளர் சமையல் வேலைக்கு செல்லும் அவலம்

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, திருத்தணி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களில், ஒரு லட்சம் பேர் விசைத்தறி நெசவு தொழில் செய்து வருகின்றனர்.இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக, நெசவு தொழிலில் போதிய வேலைவாய்ப்பும், கூலி உயர்வும் கிடைக்கவில்லை. இதனால், பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.விசைத்தறி உதிரிபாகங்கள் விலை பன்மடங்காக அதிகரித்து விட்டது. ஆனால், அதற்கேற்ப கூலி உயர்வு இல்லை. ஆண்டுதோறும் பெரும் போராட்டங்களை நடத்தி, சொற்ப அளவில் கூலி உயர்வு கிடைக்கும் நிலை உள்ளது.தற்போதைய விலைவாசி உயர்வுக்கேற்ப, ஆண்டுதோறும் கூலி உயர்வுக்கு வழி இல்லாததால், நெசவு தொழிலில் உள்ள இளைஞர்களுக்கு மணப்பெண் கிடைப்பதும், ‛குதிரைகொம்பாக' உள்ளது.இதற்கு காரணம், நிரந்தர வருவாய் நெசவு தொழிலில் கேள்விக்குறியாக இருப்பது தான். ‛காஞ்சிபுரம் சென்றால் காலாட்டிக்கொண்டு சம்பாதிக்கலாம்' என நெசவு குறித்து பெருமிதமான ஒரு கருத்து முன்பு இருந்தது. ஆனால், அந்த கருத்து தற்போது வழக்கொழிந்து விட்டது என்றே தோன்றுகிறது. ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, திருத்தணி ஒன்றியங்களில் நெசவு தொழிலில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள், தற்போது திருமண நிகழ்ச்சிகளில் விருந்து பரிமாறும் ஒப்பந்த தொழிலாளர்களாக மாறி வருகின்றனர்.சமையல் கலைஞர்களாக மாறி உணவு பரிமாறும் வேலைக்காக சென்னைக்கு படைபெடுக்க துவங்கியுள்ளனர். மாதத்தில் 15 நாட்கள் வரை வேலை நிச்சயம் உண்டு.எந்தவித முதலீடும் இல்லாமல், கணிசமான வருவாய் கிடைக்கிறது என்பதால், நெசவு தொழிலை மறந்து, உணவு பரிமாற சென்று வருகின்றனர். இதனால், அடுத்த சில ஆண்டுகளில் நெசவு தொழில் முற்றிலுமாக அழிந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !