கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்
திருவள்ளூர்:கலெக்டர் அலுவலக வளாகத்தில், தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர், பெரியகுப்பம், இந்திரா நகரைச் சேர்ந்தவர் சேகர் மனைவி மீனா, 42. நேற்று காலை, கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க, பெட்ரோல் கேனுடன் வந்தார். நுழைவாயிலில் காவலர்கள் சோதனை அறிந்ததும், மாற்று வழியில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின், கலெக்டர் கார் நிறுத்தும் இடத்திற்கு எதிரில், திடீரென தனது உடலில், பெட்ரோலை ஊற்றிக் கொண்டார். இதனைப் பார்த்ததும், அங்கிருந்த காவலர்கள் மற்றும் மக்கள் தடுத்தனர். போலீசார் விசாரணையில் தெரிய வந்த விபரம்: மீனாவின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். சேகரின் வீட்டில் மீனா வசித்து வந்த நிலையில், மீனாவின் சகோதரர் புஷ்பராஜ் சேகரின் வீட்டை அபகரித்து, மீனாவை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார். இதுகுறித்து, திருவள்ளூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்காததால், கலெக்டரிடம் மனு அளிக்க வந்தது தெரிந்தது. இச்சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.