குட்கா பறிமுதல் பெண் சிக்கினார்
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம், சிற்றம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக, திருவள்ளூர் எஸ்.பி.,க்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, எஸ்.பி., சீனிவாசபெருமாள் உத்தரவின்படி, உதவி ஆய்வாளர் மோகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் சிற்றம்பாக்கம் பகுதியில் கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது, நாகராஜ் என்பவரது பெட்டி கடையில் சிறுவர்கள் மற்றும் வடமாநிலத்தவர்கள் கூட்டமாக நின்று பொருட்கள் வாங்கி கொண்டிருந்தனர். போலீசாரைக் கண்டதும் பொருள் வாங்கி கொண்டிருந்தவர் ஓடி விட்டனர்.அப்போது, பெட்டிக்கடையில் இருந்த பெண், போலீசாரைக் கண்டதும் கையில் வெள்ளை பையுடன் தப்பியோட முயன்றார்.கடம்பத்துார் போலீசார், அந்த பெண்ணை பிடித்து அவரிடமிருந்த வெள்ளைப் பையில் சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தினர் விசாரணையில் அந்த பெண் அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி, 50, என்பதும், பையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பாக்குகள் இருப்பது தெரிய வந்தது.இதுகுறித்து வழக்கு பதிந்த கடம்பத்துார் போலீசார், லட்சுமியை கைது செய்து, அவரிடமிருந்து 149 ஹான்ஸ், 25 விமல், 3 கூல்லிப், என, மொத்தம் 177 போதைப் பாக்குகளை பறிமுதல் செய்தனர்.