உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / எந்த மாவட்டத்தில் இருக்கிறோம் தெரியாத நிலையில் 12 கிராமத்தினர்

எந்த மாவட்டத்தில் இருக்கிறோம் தெரியாத நிலையில் 12 கிராமத்தினர்

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம் கடந்த 1986ம் ஆண்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. அப்போது, கோவில்பட்டி அருகேயுள்ள இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள இளையரசனேந்தல், அய்யநேரி, அப்பனேரி, பிள்ளையார்நத்தம் உள்ளிட்ட 12 பஞ்சாயத்துகளை துாத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.பல போராட்டங்களுக்குப் பின், 2008 மே 1ம் தேதி இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 பஞ்சாயத்துகள் துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாலுகாவுடன் இணைக்கப்பட்டன. ஊரக வளர்ச்சித் துறை, தொடக்கக்கல்வி, மின்சாரத்துறை தவிர, மற்ற துறைகள் துாத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன.அந்த மூன்று துறைகளும் சமீபத்தில், தென்காசி மாவட்டம் உருவானபோது, அந்த மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் வந்தன. இதனால், முக்கிய மூன்று துறைகள் வேறு மாவட்ட நிர்வாக கட்டுப்பாட்டில் இருப்பதால், கடந்த 16 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர்.வருவாய் துறை துாத்துக்குடி மாவட்டத்தின் நிர்வாகத்திலும், ஊரக வளர்ச்சி துறை தென்காசி மாவட்ட நிர்வாகத்திலும் இருப்பதால், விவசாயிகள் அரசின் மானியத் தொகையை பெற முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.அதுபோல, வீடு கட்ட விரும்புவோர் அதற்கான உரிமம் பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய முடியாமல் பரிதவிக்கின்றனர். 16 ஆண்டுகளாக நிலவி வரும் இந்த பிரச்னைக்கு முதல்வர் உரிய தீர்வு காண வேண்டும் என, இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை