நியமனம் நடந்ததா அண்ணாமலை கேள்வி
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை:துாத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட, சிறுபாடு கிராமத்தை சேர்ந்த, ஷாகிரா என்ற பெண், டாக்டர்கள் இல்லாத நிலையில் முறையான சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்திருக்கிறார். தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில், உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. அரசு ஆரம்ப சுகாதார மையங்களில், 1,467 டாக்டர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது குறித்து, ஜன., 1ல் கேள்வி எழுப்பப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில், 2,642 டாக்டர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கியதாக அறிவிக்கப்பட்டது.ஆனால், இன்னும் ஆரம்ப சுகாதார மையங்களில், டாக்டர் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், பணி ஆணை வழங்கப்பட்ட டாக்டர்களை, எங்கு நியமனம் செய்தனர் என்ற கேள்வி எழுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.