முஸ்லிம் லீக் பொருளாளர் வீட்டில் பீடி இலைகள், மஞ்சள் பறிமுதல்
துாத்துக்குடி:துாத்துக்குடி, லுார்தம்மாள்புரத்தில் ஒரு வீட்டில் இலங்கைக்கு கடத்த விரலி மஞ்சள், பீடி இலை உள்ளிட்டவைகள் பதுக்கி வைத்திருப்பதாக தாளமுத்துநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் மற்றும் மரைன் போலீசார் கூட்டாக நேற்று முன்தினம் இரவு அந்த வீட்டில் சோதனை செய்ததில், 33 மூட்டைகளில் இருந்த, 2,310 கிலோ விரலி மஞ்சள், 21 மூட்டைகளில் இருந்த 840 கிலோ பீடி இலை, 100 கேன்களில் ஆசிட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அங்கு நின்ற மினி லாரி ஒன்றையும் பறிமுதல் செய்தனர். போலீசார் கூறியதாவது:பீடி இலைகள், விரலி மஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீடு மீராஷா, 54 என்பவருக்கு சொந்தமானது. அவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாவட்ட பொருளாளர். அவர் மீது கடல் அட்டை கடத்தியதாக வனத்துறையில் 25க்கும் மேற்பட்ட வழக்குகளும், தாளமுத்து நகர், தென்பாகம், வடபாகம் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளும் உள்ளன.தலைமறைவாக உள்ள மீராஷாவை தேடி வருகிறோம். ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர்களோடு நெருக்கமாக இருப்பதால், அவர் மீது தீவிர நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் இருந்து வருகிறது.இவ்வாறு கூறினர்.