| ADDED : மே 16, 2024 02:28 AM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டத்தில் பிரதான தொழில்களில் ஒன்றாக மீன்பிடி தொழில் இருந்து வருகிறது. இந்நிலையில், கடலில் உள்ள அரிய வகை மீன்கள் குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி, 'அரியோசோமா' என்ற புதிய வகை விலாங்கு மீனை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.இதுகுறித்து, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் இயங்கும், தேசிய மீன் மரபணு ஆராய்ச்சி விஞ்ஞானி கோடீஸ்வரன் கூறியதாவது:அரியோசோமா இனத்தைச் சேர்ந்த புதிய இனமான காங்கிரிட் விலாங்கு மீன், துாத்துக்குடியில் புதிதாக கண்டறியப்பட்டது. 42 செ.மீ., நீளம் கொண்ட இந்த புதிய வகை விலாங்கு மீனுக்கு, 'அரியோசோமா துாத்துக்குடி' என பெயரிடப்பட்டுள்ளது.இந்த புதிய இனம் இதுவரை அறியப்பட்ட இனங்களில் இருந்து இரு நிற உடல், வெளிர் பழுப்பு முதுகு போன்ற வித்தியாசங்களை கொண்டுள்ளது. துாத்துக்குடி கடலில் 60 மீட்டர் ஆழத்தில் இந்த விலாங்கு மீன்கள் காணப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.