முன்னாள் ராணுவ வீரர் கோவில்பட்டியில் கொலை
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கதிரேசன்கோவில் தெருவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மகேந்திரன், 42. கடந்த 2ம் தேதி இரவு கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலம் கீழ்ப்பகுதியில் உள்ள ஒரு மது கூடத்தில் மது அருந்தினார். அப்போது, அவரிடம் ஒருவர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இருவருக்குள் ஏற்பட்ட மோதலில் அந்த நபர் மகேந்திரனை சரமாரியாக தாக்கினார். காயமடைந்த அவர் மறுநாள் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு ரத்த வாந்தி எடுத்த அவர், மேல் சிகிச்சைக்காக துாத்துக்குடி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சேர்க்கப்பட்ட சில மணி நேரத்தில் மகேந்திரன் இறந்தார்.இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும், மகேந்திரன் கொலை தொடர்பாக கோழிப்பண்ணை உரிமையாளர் லட்சுமணன், 37, என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:மகேந்திரனின் மனைவி ஷாலினி, குழந்தைகளுடன் கேரளாவில் வசிக்கிறார். மகேந்திரனுக்கும், லட்சுமணனுக்கும் இடையே பணம் கொடுக்கல் -- வாங்கல் தொடர்பாக பாரில் வைத்து தகராறுஏற்பட்டுள்ளது.லட்சுமணன் தாக்கியதில், மகேந்திரனுக்குஉள்காயம் ஏற்பட்டு இறந்தார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.