டாஸ்மாக்கை அகற்றக்கோரி போராட்டம்
துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே வானரமுட்டியில் இருந்து தோணுகால் செல்லும் சாலையில், கடந்த 2ம் தேதி அரசு டாஸ்மாக் மதுபானக்கடை திறக்கப்பட்டது.கிராம மக்கள் எதிர்ப்பையும் மீறி மதுக்கடை திறக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அந்த கடையை மூட வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட நேற்று கிராம மக்கள் திரண்டனர்.நாலாட்டின்புதுார் போலீசார் அவர்களிடம் பேச்சு நடத்தினர். கடை அகற்றப்படும் என உத்தரவாதம் வழங்கினால் மட்டுமே, போராட்டத்தை கைவிட்டு சமாதான கூட்டத்தில் பங்கேற்பதாக மக்கள் தெரிவித்தனர்.பின், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்ற மக்கள், அலுவலக வளாகத்திலேயே அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த கோட்டாட்சியர் மகாலட்சுமியிடம், கிராம மக்கள் கோரிக்கை மனுவை வழங்கினர்.மனுவை பெற்றுக் கொண்ட அவர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.