உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / மீண்டும் தலைதுாக்கும் ரேஷன் அரிசி கடத்தல் துாத்துக்குடி மாவட்ட போலீசார் திணறல்

மீண்டும் தலைதுாக்கும் ரேஷன் அரிசி கடத்தல் துாத்துக்குடி மாவட்ட போலீசார் திணறல்

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கடந்த மே 23ம் தேதி ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் வழக்கறிஞர் ஒருவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதற்கு பின், ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் மீது போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். சில மாதங்கள் அமைதியாக இருந்த கும்பல் மீண்டும் தற்போது தலைதுாக்கியுள்ளதால், மாவட்டம் முழுதும் ரேஷன் அரிசி கடத்தல் மும்முரமாக நடக்கிறது.வீடுகளில் இருந்து ரேஷன் அரிசியை சேகரித்து, காட்டுப் பகுதிகளில் உள்ள கிடங்குகளில் பதுக்கி வைத்து கடத்திய கும்பல், தற்போது, நேரடியாக ரேஷன் அரிசி கடை ஊழியர்களிடம் இருந்தே மூட்டை மூட்டையாக அரிசியை பெறுகின்றனர்.இதை, உணவு வழங்கல் துறை அதிகாரிகளும், குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.ரேஷன் அரிசி மூட்டைகளை கேரள மாநிலத்துக்கு கடத்தி வந்த கும்பல், தற்போது வேறு முறையில் பணம் சம்பாதிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது.அதாவது, ரேஷன் அரிசி கடை ஊழியர்களுடன் தொடர்பில் உள்ள கடத்தல் கும்பல், நல்ல அரிசி வரும்போது அதை மூட்டையாக வாங்கி சென்று லேசாக பட்டை தீட்டி பிரபல பிராண்டு பெயரில், 26 கிலோ மூட்டைகளாக குறைந்த விலைக்கு கிராமப் பகுதிகளில் விற்பனை செய்கின்றன.இந்த செயலில் ஆளுங்கட்சியை சேர்ந்த கோவில்பட்டி நகராட்சி பெண் கவுன்சிலர்கள் இருவரின் கணவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் காவல் துறையினரையும், உளவுப்பிரிவு மற்றும் எஸ்.பி., தனிப்பிரிவு போலீசாரையும் 'கவனித்து' வருகின்றனர்.துாத்துக்குடி மாநகரப் பகுதியிலும், தி.மு.க., பகுதி செயலர் ஒருவரின் சகோதரர் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வருகிறார். மாநகர முக்கிய நிர்வாகி ஒருவர் ஆசியுடன் அவர் இந்த செயலில் ஈடுபட்டு வரும் அவரை, போலீசாரும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.கோவில்பட்டி மட்டுமின்றி மாவட்டம் முழுதும் மீண்டும் ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் அதிகரிக்க துவங்கியுள்ளதால், போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.ரேஷன் அரிசி கடத்தியதால் சிக்கிய வாகனம். கோப்பு படம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ