துாத்துக்குடி துறைமுகத்தில் புதிதாக 2 சரக்கு தளம்
துாத்துக்குடி:''துாத்துக்குடி வ.உ.சி., துறை முகத்தில் புதிதாக இரண்டு சரக்கு தளம் அமைக்கும் திட் டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது,'' என, துறைமுக ஆணையரக தலைவர் சுசாந்தகுமார் புரோஹித் தெரிவித்தார். சுதந்திர தின விழாவை முன்னிட்டு துாத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், தேசிய கொடியை ஏற்றி வைத்து ஆணைய தலைவர் சுசாந்தகுமார் புரோஹித் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் பேசியதாவது: கடந்தாண்டு, 85 கோடியே 30 லட்சம் டன் சரக்குகளை கையாண்டுள்ள இந்த துறைமுகம், இந்த ஆண்டு இதுவரை 29 கோடியே 3 0 லட்சம் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில், 5.22 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தாண்டு இதுவரை 2 லட்சத்து 89,000 கன்டெய்னர் பெட்டிகளை துறைமுகம் கையாண்டுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 9 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. துறைமுகத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது வடக்கு சரக்கு தளத்தின் மிதவை ஆழம் 14.2 மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. இதில், ஆண்டுக்கு 70 லட்சம் டன் சரக்குகள் கையாளப்படும். துறைமுகத்தில் புதிதாக பத்தாவது சரக்கு தளம், நான்காவது வடக்கு சரக்கு தளம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மூன்றாவது, நான்காவது மற்றும் ஏழாவது சரக்கு தளங்களின் ஆழத்தை 15.5 மீட்டராக உயர்த்தவும், கப்பல்கள் உள்ளே வரும் நுழைவாயிலை விரிவாக்கம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் முதல் பசுமை துறைமுகமாக உருவாகும் வகையில், பசுமை மெத்தனால் சேமிப்பு கிடங்கு அமைப்பதற்கும், காற்றாலை இறகுகளை கையாளுவதற்காக முனையம் அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். விழாவை முன்னிட்டு தீவிரவாதிகள் தாக்குதலை முறியடிப்பது தொடர்பாக, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தத்ரூபமாக நடித்து காட் டினர்.