துாத்துக்குடி ஏர்போர்ட்டிற்கு இ--மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
துாத்துக்குடி:துாத்துக்குடி விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக நேற்று அலுவலகத்திற்கு இ--மெயில் வந்துள்ளது. வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு போலீசார் ரூரல் டி.எஸ்.பி., சுதிர் தலைமையில் சோதனை நடத்தினர். மெட்டல் டிடெக்டர் கருவியால் விமான நிலையம் முழுதும் தீவிரமாக சோதனை நடத்தப்பட்டது.விமான நிலைய வளாகத்தில் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.புயல் எச்சரிக்கை காரணமாக துாத்துக்குடி --- சென்னை இடையே விமான சேவை நேற்று ரத்து செய்யப்பட்டது. பெங்களூருக்கு செல்லக்கூடிய பயணியர் பலத்த சோதனைக்கு பிறகே அனுப்பி வைக்கப்பட்டனர். பயணியரின் உடமைகள் முழுமையாக சோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டது.வழக்குப்பதிவு செய்த புதுக்கோட்டை போலீசார், சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் இ--மெயில் அனுப்பியவரின் விபரங்கள் குறித்து விசாரிக்கின்றனர்.