டிராக்டர் மீது லாரி மோதல் துாய்மை பணியாளர் பலி
துாத்துக்குடி: டவுன் பஞ்சாயத்து டிராக்டர் மீது லாரி மோதியதில், பெண் துாய்மை பணியாளர் இறந்தார். துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம், வேலிடுபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியம்மாள், 42. விளாத்திகுளம் டவுன் பஞ்சாயத்தில் ஒப்பந்த அடிப்படையில், துாய்மை பணியாளராக வேலை பார்த்தார். அவருடன், கார்த்திக் என்பவரும் பணியாற்றி வருகிறார். விளாத்திகுளம் பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பையை ஏற்றிக் கொண்டு, டவுன் பஞ்சாயத்திற்கு சொந்தமான டிராக்டரில் இருவரும் நேற்று வேம்பார் சாலையில் உள்ள குப்பை கிடங்கிற்கு சென்று கொண்டிருந்தனர். கேரளா மாநிலம், பரப்பனாங்கடியில் இருந்து சூரங்குடியில் உள்ள தனியார் மீன் ஏற்றுமதி நிறுவனத்திற்கு மீன் ஏற்றி வந்த லாரி திடீரென டிராக்டர் மீது மோதியதில், சம்பவ இடத்தில் மாரியம்மாள் இறந்தார். படுகாயமடைந்த கார்த்திக், விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.