வீடு ஜப்தியானதால் விஷம் குடித்த தம்பதி கண்டுகொள்ளாத போலீசால் கணவன் பலி; மனைவி சீரியஸ்
துாத்துக்குடி:வீடு ஜப்தி நடவடிக்கையை எதிர்த்து தம்பதி விஷம் குடிக்க, அதை கண்டுகொள்ளாத போலீசாரால், கணவர் பரிதாபமாக இறந்தார்; மனைவி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறார்.துாத்துக்குடி மாவட்டம், வல்லநாடு பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சங்கரன், 45; லாரி டிரைவர். இவருக்கு சொந்தமான வீட்டை அடகு வைத்து, 2020ல் துாத்துக்குடி தனியார் நிதி நிறுவனத்தில் 5 லட்சம் ரூபாய் கடன் பெற்றார்.சில மாதங்கள் தவணை செலுத்திய சங்கரன், பின்னர் தவணை தொகையை சரியாக செலுத்த வில்லை. நிறுவனத்தினர் பணம் செலுத்தும்படி நெருக்கடி கொடுத்தனர்; வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட வேண்டும் என, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, துாத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி., சுகிர் முன்னிலையில் நிறுவன ஊழியர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் சங்கரன் வீட்டை ஜப்தி செய்ய சென்றனர். வீட்டில் இருந்த பொருட்களை அவர்கள் வெளியே எடுக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.சங்கரனும், அவரது மனைவி பத்திரகாளி, 43, என்பவரும் ஜப்தி செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் ஊர் மக்கள் திரண்டனர். நீதிமன்ற உத்தரவுப்படியே நடவடிக்கை எடுக்கப்படுவதாக போலீசார் கூறியதை தொடர்ந்து, வீட்டை ஜப்தி செய்யும் பணி துவங்கியது.பத்திரகாளி, சங்கரன் வீட்டில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தனர்.இதையறியாமல், டி.எஸ்.பி., முன் மயங்கி விழுந்த சங்கரனை பார்த்த போலீசார், அவர் நடிப்பதாக கூறியுள்ளனர். விஷம் குடித்த இருவரும் 45 நிமிடம் அங்கேயே உயிருக்கு போராடினர்.இதை கண்டுகொள்ளாமல் போலீசார் முன்னிலையில் வீட்டுக்கு 'சீல்' வைக்கப்பட்டு, ஜப்தி செய்யப்பட்டது. சங்கரன் வாயில் இருந்து நுரை தள்ளிய பிறகே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.ஆனால், வழியிலேயே சங்கரன் உயிரிழந்தார். பத்திரகாளிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தம்பதிக்கு பிளஸ் 2 படிக்கும் பானு, 18, என்ற மகளும், 10ம் வகுப்பு படிக்கும் கல்யாணி, 16, என்ற மகனும் உள்ளனர். முறப்பநாடு போலீசார் விசாரிக்கின்றனர்.
தவிக்கும் நாய்கள்
நீதிமன்ற உத்தரவுப்படி சங்கரன் வீட்டிற்கு கோர்ட் ஊழியர்கள் சீல் வைத்தனர். அவரது வீட்டில் இருந்த பொருட்கள் தெருவில் வீசப்பட்டன. ஏற்கனவே ஒருமுறை ஜப்தி நடவடிக்கை எடுத்த போது, சங்கரன் மிரட்டியதால் தற்போது கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். சங்கரனின் மூன்று வளர்ப்பு நாய்களையும் வீட்டுக்குள் வைத்து, கேட்டிற்கு சீல் வைக்கப்பட்டது. நாய்கள் வெளியே வர முடியாமல் குரைத்தபடி தவிக்கின்றன. நாய்களை விடுவிக்க அக்கம்பக்கத்தினர் வலியுறுத்தியும் போலீசார் கண்டுகொள்ளவில்லை.