துாத்துக்குடியில் போதை கும்பல் கொடூரம்: மாலுமி வெட்டி கொலை; 3 பேர் மீது வழக்கு
துாத்துக்குடி : பைக் மோதிய தகராறில், போதை கும்பலால் கப்பல் மாலுமி வெட்டி கொலை செய்யப்பட்டார்.துாத்துக்குடி மாவட்டம், திரேஸ்புரத்தை சேர்ந்தவர் மரடோனா, 31; கப்பல் மாலுமி. விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்த இவர், நேற்று முன்தினம் இரவு திரேஸ்புரம் சந்திப்பில் பைக்கில் சென்றுள்ளார்.அப்போது, பைக் ஒன்று, மரடோனா பைக் மீது மோதியது. மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதி என்பதால், மெதுவாக செல்லும்படி, பைக்கில் வந்தவர்களை மரடோனா எச்சரித்து உள்ளார். சிறிது நேரத்தில் கடற்கரை பகுதிக்கு சென்ற மரடோனாவை, குடிபோதையில் இருந்த மூவர் கொண்ட கும்பல், அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது.தலை மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்ட மரடோனாவுக்கு, தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.இது தொடர்பாக, லுார்தம்மாள்புரத்தை சேர்ந்த மதன்குமார், 34, உட்பட மூவர் மீது வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். கடற்கரை பகுதியில் மது, கஞ்சா போன்ற போதை பொருட்களை பயன்படுத்தும் கும்பல், தொடர்ந்து இதுபோன்ற அட்டூழியம் செய்து வருவதாக அப்பகுதி மீனவர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.