துாத்துக்குடி -- திருச்செந்துார் சாலை பல்லாங்குழி ஆனதால் அவஸ்தை
துாத்துக்குடி; துாத்துக்குடி -- திருச்செந்துார் சாலை சேதமடைந்து காணப்படுவதால், வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.தேசிய நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் இருவழி சாலையாக உள்ள இந்த சாலையை, அகலப்படுத்தும் பணி துவங்கி, பல ஆண்டுகள் ஆகின்றன. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால், பணி கிடப்பில் உள்ளது. பக்தர்கள் கோரிக்கை
கடந்த 2023 டிசம்பரில் பெய்த கனமழையில், இந்த சாலையில் அதிக பாதிப்பு ஏற்பட்டது. சாலை போக்குவரத்திற்கே லாயக்கற்ற நிலையில் காட்சியளிக்கிறது.உடன்குடி, சாத்தான்குளம், திருச்செந்துாரில் இருந்து சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு, 50க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள், இந்த பாதையில் இயக்கப்படுகின்றன. தவிர, திருச்சி, மதுரை, ராமநாதபுரம், கோவை ஆகிய பகுதிகளில் இருந்து திருச்செந்துாருக்கு இயக்கப்படும் பஸ்களும், தனியார் வாகனங்களும் இந்த சாலையில் செல்கின்றன. சாலை சரியில்லாததால், வாகன ஓட்டிகள் அதிக பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.திருச்செந்துார் கோவிலுக்கு செல்வோர் இந்த சாலையில் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகளும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். பரிசீலனை
தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது:துாத்துக்குடி --- திருச்செந்துார் சாலையில் ஏற்பட்ட பாதிப்பை சீரமைக்கும் வகையில், மூன்று கட்டமாக பணிகள் செய்வதற்கு, 22 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பில் திட்டம் தயார் செய்யப்பட்டு, டெண்டர் கோரப்பட்டு பரிசீலனையில் உள்ளது. டெண்டர் முடிவானவுடன் இரண்டு வாரத்திற்குள் பணி துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.