உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / மின்னணு கழிவுகளை சேகரித்து மறுசுழற்சி செய்யும் அமைப்பு துவக்கம்

மின்னணு கழிவுகளை சேகரித்து மறுசுழற்சி செய்யும் அமைப்பு துவக்கம்

துாத்துக்குடி:மின் மற்றும் மின்னணு கழிவுகளை வீடுகளுக்கே சென்று சேகரித்து, மறுசுழற்சி செய்யும் பணிக்காக, சூழல் சிங்கம் என்ற அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. துாத்துக்குடி லோக்சபா தி.மு.க., - எம்.பி., கனிமொழி முன்னெடுப்பில் புத்தொழில் களம் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு, இளம் தொழில் முனைவோர் 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர். டீப் சைக்கிள் ஹப் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் சார்பில், மின் மற்றும் மின்னணு கழிவுகளை சேகரித்து மறுசுழற்சி செய்யும் பணி குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் சார்பில், மின் கழிவுகளை வீடுகளுக்கே சென்று சேகரிக்கும் வகையில், சூழல் சிங்கம் என்ற அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. கனிமொழி எம்.பி., நேற்று துவக்கி வைத்து, அதற்கான இணையதளத்தையும் அறிமுகம் செய்தார். தொடர்ந்து அவர் கூறியதாவது: நவீன பொருட்கள் மற்றும் சாதனங்களை குறுகிய காலத்திற்கு பயன்படுத்துவதால், மின்னணு கழிவுகள் அதிகமாக சேருகின்றன. அந்த பொருட்களை நீண்ட காலத்திற்கு பயன்படுத்தினால், மின்னணு கழிவுகளை குறைத்துக் கொள்ள முடியும் மற்றும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கலாம். தற்போது அந்த கழிவு களை வீடுகளுக்கே சென்று சேகரித்து மறுசுழற்சி செய்யும் பணியில் சூழல் சிங்கம் அமைப்பு ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக மாணவ, மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, கலெக்டர் இளம்பகவத், கமிஷனர் பிரியங்கா, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ