ஆபாச வீடியோ எடுத்து ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டும் கும்பல்
துாத்துக்குடி,:ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டும் கும்பல் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக, இளம் விதவை பெண் குற்றம்சாட்டியுள்ளார்.துாத்துக்குடியை சேர்ந்த இளம் விதவை ஒருவர் நேற்று தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:சில ஆண்டுகளுக்கு முன் உடல்நல குறைவால் கணவர் இறந்து விட்டதால் 8 வயது மகளுடன் பெற்றோர் பாதுகாப்பில் வசிக்கிறேன். டூவிபுரம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த அஜித்குமார், 31, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளும்படி கடந்த ஆண்டு ஜூலை 2 ல் அண்ணாநகர் 5 வது தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்ற அஜித்குமார், குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்புணர்ச்சி செய்துவிட்டார். அதை வீடியோவாக எடுத்து வைத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி வருகிறார்.இதுவரை 10 லட்சம் ரூபாய், 6 சவரன் தங்க நகைகளை அவர் மிரட்டி வாங்கி உள்ளார். அஜித்குமார் மீது ரேஷன் அரசி கடத்தல் வழக்கு உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க தென்பாகம் காவல் நிலையத்தில் உள்ள போலீசாரிடம் ஆளுங்கட்சி பிரமுகர்கள் சிபாரிசு செய்வதால் இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.புகார் அளித்ததால் என்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். என்னையும், என் தந்தையையும் அஜித்குமார் தலைமையிலான கும்பல் தாக்கியதால், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றோம். அப்போதும், போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை.ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி வரும் அஜித்குமார், அவருக்கு ஆதரவாக செயல்படும் ஆளுங்கட்சி பிரமுகர்கள், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரிசி கடத்தல் குற்றவாளியான அஜித்குமார் பிறந்த நாளை நண்பர்களுடன் அரிவாளால் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகியது. அதுகுறித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.