போலீசார் துரிதமாக செயல்பட்டிருந்தால் சிறுவனை மீட்டிருக்கலாம்: கடம்பூர் ராஜு
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காந்தி நகரைச் சேர்ந்த கார்த்திக் முருகன் --- பாலசுந்தரி தம்பதியின் மகன் கருப்பசாமி, 11, கொலை செய்யப்பட்ட நிலையில், போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.அவர் அளித்த பேட்டி:கடந்த 9ம் தேதி காலை, 10:00 மணிக்கு சிறுவன் கருப்பசாமி மாயம் என, தகவல் தெரிந்ததும் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டிருந்தால் சிறுவனை உயிரோடு மீட்டிருக்கலாம். போதைப் பொருட்களால் தமிழகம் முழுதும் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.உயிரிழந்த சிறுவன் குடியிருக்கும் பகுதியிலும் போதை பொருட்கள் விற்பனை அதிகமாக நடைபெற்றுள்ளது. அப்பகுதி மக்களும், உயிரிழந்த சிறுவனின் தாய் பாலசுந்தரியும் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் இல்லை.காவல்துறை விரைந்து குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பெற்றோர் தற்கொலை முயற்சி
கார்த்திக் முருகன், பாலசுந்தரி, சிறுவனின் தாத்தா கருத்தப்பாண்டி ஆகிய மூன்று பேரும் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை தடுத்து காப்பாற்றினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவில்பட்டி டி.எஸ்.பி., ஜெகநாதன், தாசில்தார் சரவணப்பெருமாள் சிறுவனின் குடும்பத்தினரை சந்தித்து சமாதானப்படுத்தினர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என, உறுதி அளித்தனர்.