செந்துார் கோவில் விடுதியில் மதுரை வியாபாரி மர்ம சாவு
திருச்செந்துார்:மதுரை, வளையன்குளம் சவுராஷ்டிரா காலனியை சேர்ந்த வியாபாரி பாலசுப்பிரமணியன், 57. இவர் கடந்த, 30ம் தேதி திருச்செந்துார் வந்தார். அங்குள்ள சுப்பிரமணியர் விடுதியில் இரண்டு நாட்களுக்கு அறை எடுத்து தங்கியிருந்தார். பின், மேலும் இரண்டு நாட்களுக்கு அறையில் தங்க அனுமதி பெற்றார்.அதற்கு பின் அவரும் நீட்டிப்பு செய்யவில்லை; அறையை காலி செய்யாததை ஊழியர்களும் கண்காணிக்கவில்லை. சில நாட்களாக அவர் எடுத்திருந்த அறை திறக்காமல் இருந்த நிலையில், துர்நாற்றம் வீசியது. விடுதி ஊழியர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது, பாலசுப்பிரமணியன் படுக்கையில் இறந்து கிடப்பது தெரியவந்தது.போலீசார் மற்றும் விடுதி ஊழியர்கள் கதவை உடைத்து பார்த்தபோது, பாலசுப்பிரமணியின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. போலீசார், உடலை மீட்டு திருச்செந்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருச்செந்துார் கோவில் போலீசார் விசாரிக்கின்றனர். கோவில் விடுதியில் நாள் கணக்கில் தங்கி இருந்தவரை கண்காணிக்காத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.