பிறந்த குழந்தை மூச்சுத்திணறி பலி ஜி.ஹெச்., அலட்சியம் என புகார்
துாத்துக்குடி:அரசு மருத்துவர்கள் அலட்சியமாக செயல்பட்டதால், பிரசவத்தில் குழந்தை இறந்து விட்டதாக தொழிலாளி குற்றம்சாட்டியுள்ளார்.துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே வடக்கு உடைப்பிறப்பு கிராமத்தைச் சேர்ந்த சிவா கூறியதாவது:எனது மனைவி ஜெயசித்ராவை, 26, பிரசவத்திற்காக கடந்த 4ம் தேதி திருச்செந்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தேன். சுகப்பிரசவம் இருக்கும் என டாக்டர்கள் கூறியதால் மறுநாள் வரை காத்திருந்தோம். ஜெயசித்ராவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு, குழந்தை பிறக்க தாமதமானது. அப்போது, செவிலியர்களும், துாய்மை பணியாளர்களும் ஜெயசித்ராவின் வயிற்றில் தாக்கினர்.வலியால் துடித்த அவருக்கு 5ம் தேதி ஆப்பரேஷன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் துாத்துக்குடி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தோம். நேற்று முன்தினம் குழந்தை இறந்தது. இதனால், மனைவியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளேன்.திருச்செந்துார் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பணியில் இருப்பதே இல்லை. பிரசவ வார்டில் செவிலியர்களும், துாய்மை பணியாளர்களும் அஜாக்கிரதையாக இருந்ததால், குழந்தையை இழந்துள்ளேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.