தாமிரபரணி பாலத்தில் இருந்து தவறி விழுந்த காவலர் மரணம்
துாத்துக்குடி:தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் இருந்து தவறி ஆற்றுக்குள் விழுந்த காவலர் பரிதாபமாக உயிரிழந்தார்.துாத்துக்குடி மாவட்டம், வல்லநாடு பகுதி தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பாலத்தில், நேற்று முன்தினம் இரவு நிகழ்ந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்க முறப்பநாடு போலீசார் சென்றனர்.அப்போது, காவலரான தென்காசி மாவட்டம், கீழகழுநீர்குளத்தை சேர்ந்த சங்கர்குமார், 31, பாலத்தின் தடுப்பு சுவரில் கை வைத்தபோது, நிலைதடுமாறி பாலத்தில் இருந்து கீழே விழுந்து, பலத்த காயமடைந்தார்.போலீசார் உடனடியாக அவரை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், வழியிலேயே உயிரிழந்தார். முறப்பநாடு போலீசார் விசாரிக்கின்றனர்.விபத்தில் உயிரிழந்த சங்கர்குமார் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு, 30 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.