உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / கொலை செய்யப்பட்டவரின் உடலை வாங்க மறுப்பு 

கொலை செய்யப்பட்டவரின் உடலை வாங்க மறுப்பு 

துாத்துக்குடி:உடன்குடி அனல் மின் நிலையம் முன் வட மாநில தொழிலாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜார்கண்ட் மாநிலம், கோடர்மா மாவட்டம், ஜும்ரிதில்லையா கிராமம் மகாத்மா காந்திநகரை சேர்ந்தவர் அர்ஜுன் பிரசாத் யாதவ், 49. உடன்குடி அனல்மின் நிலையத்தில் நடந்து வரும் கட்டுமான பணியில் தனியார் ஒப்பந்த தொழிலாளியாக இரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். மேலும், டெக்சல் என்ற ஒப்பந்த நிறுவனத்திற்கு ஆட்களை தேர்வு செய்து கொடுக்கும் சூப்பர்வைசர் பணியையும் கவனித்து வந்துள்ளார். அக். 5 ம் தேதி குலசேகரன்பட்டினம் தருவைகுளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார். பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் மதுக்கடை பின்புறம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த குலசேகரன்பட்டினம் போலீசார் முத்துசெல்வன், 28, மூர்த்திராஜா, 27, ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில், கொலை செய்யப்பட்ட அர்ஜுன் பிரசாத் யாதவ் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அவரது உடலை வாங்க மறுத்தனர். இதற்கிடையே, அர்ஜுன் பிரசாத் யாதவ் குடும்பத்தினர் மற்றும் டெக்சல் நிறுவனத்தில் பணிபுரியும் 300 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று திடீரென அனல் மின்நிலைய நுழைவு வாயில் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மற்ற பணியாளர்களையும் அவர்கள் உள்ளே விடாமல் தடுத்தனர். இதுதொடர்பாக அவர்களிடம் பேச்சு நடத்தப்பட்டது. கொலை செய்யப்பட்ட அர்ஜுன் பிரசாத் யாதவ் குடும்பத்திற்கு 15 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என டெக்சல் நிறுவனம் அறிவித்தை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை