‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் பணி நீக்கம்
துாத்துக்குடி: பாலியல் புகாரில், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் திலீபன், 42, என்பவர் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். துாத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த திலீபன், கடந்த ஜூனில், பெண் போலீஸ் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், அவரை பணி நீக்கம் செய்து, டி.ஐ.ஜி., திருநாவுக்கரசு உத்தரவிட்டுள்ளார். கடந்த, 2023ல் கன்னியாகுமரி மாவட்டம், அருமனை போலீஸ் எஸ்.ஐ.,யாக இருந்த திலீபன், சென்னை பொருளாதார குற்றப்பிரிவிற்கு அயற்பணியில் மாற்றப்பட்டார். அந்த சமயத்தில், எவ்வித முன் அனுமதியும் இல்லாமல், உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் தொடர்ந்து, 555 நாட்கள் பணிக்கு வராமல் இருந்துள்ளார். இது தொடர்பாக, மருத்துவ குழுவின் முன்பு ஆஜராகாமலும் இருந்துள்ளார். துறை ரீதியான விசாரணையின் போதும், உரிய ஒத்துழைப்பு அளிக்காமலும், விளக்கம் சமர்ப்பிக்காமலும் இருந்துள்ளார். இந்த ஒழுங்கீன செயலுக்காக, திலீபன் பணி நீக்கம் செய்யப்பட்டு, அதற்கான ஆணை அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக, டி.ஐ.ஜி., அலுவலகம் தெரிவித்துள்ளது.