உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / தி.மு.க., பிரமுகரால் ஆபத்து வீடியோவில் வாலிபர் கதறல்

தி.மு.க., பிரமுகரால் ஆபத்து வீடியோவில் வாலிபர் கதறல்

துாத்துக்குடி: தி.மு.க., பிரமுகரால் தன் உயிருக்கு ஆபத்து என வாலிபர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பண்டாரஞ்செட்டிவிளை பகுதியை சேர்ந்த சக்திவேல், 27; த.வெ.க.,வில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இவரது சகோதரி முத்துலட்சுமியும், அவரது கணவர் அய்யம்பெருமாளும் சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.சில நாட்களுக்கு முன் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், முத்துலட்சுமியை அவரது கணவர் தாக்கியுள்ளார். தட்டிக் கேட்ட சக்திவேலையும் தாக்கினாராம். இது குறித்து புகார் அளிக்கப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், சக்திவேல் நேற்று வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:என் சகோதரியை பிரிந்து வாழும் அவரது கணவர் அய்யம்பெருமாள் சாலையில் வைத்து தகராறு செய்து அவரை தாக்கினார். தட்டி கேட்ட என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்தார். காவல் துறையில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.என்னை இரு முறை கொலை செய்ய முயற்சி செய்தனர். தற்போது, சாத்தான்குளத்தை சேர்ந்த தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சரவணன் என்பவர் உதவியுடன் வழக்கு பதிவு செய்யாமல் தடுத்து உள்ளனர். என் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.எனக்கும், என் குடும்பத்திற்கும் எதுவும் நடந்தால் அதற்கு தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சரவணன், என் அக்கா கணவர் அய்யம்பெருமாள் ஆகியோரே காரணம்.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.திருநெல்வேலியில், ஓய்வு பெற்ற எஸ்.ஐ., ஜாகிர் ஹுசைன் வீடியோ வெளியிட்ட சில நாட்களில் கொலை செய்யப்பட்ட நிலையில், அதுபோல ஏதும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ