வட மாநில தொழிலாளி கொலை உடலை எரித்த இருவர் சிக்கினர்
துாத்துக்குடி: குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அனல் மின்நிலையத்தில் வேலை பார்த்த வட மாநில தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார். அவரது உடலை பெட்ரோல் ஊற்றி எரித்ததாக, இரண்டு வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர். துாத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே கல்லாமொழி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அனல் மின்நிலையத்தில் வெளி மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள்,2000த்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அர்ஜுன் பிரசாத் யாதவ், 53, என்பவர் கல்லாமொழி அனல்மின் நிலையத்தில் கட்டுமான பணிக்காக, டெக்ஸ்செல் நிறுவனத்தின் லேபர் கான்ட்ராக்டராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு குலசேகரன்பட்டினத்திற்கு சென்று வருவதாக வீட்டில் இருந்து புறப்பட்டவர், இரவு 8:55 மணிக்கு டெக்ஸ்செல் நிறுவனத்தின் அதிகாரி ஜெகதீசன் என்பவருக்கு மொபைல் போனில் தொடர்பு கொண்டு, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக கூறினார். சிறிது நேரத்தில் இணைப்பு துண்டிக்கப்பட்டு, மொபைல் போன் ஆப் செய்யப்பட்டது. அவரை காணாததால் குலசேகரன்பட்டினம் காவல்நிலையத்தில் ஜெகதீசன் புகார் அளித்தார். இதற்கிடையே, குலசேகரன்பட்டினத்தில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக்கடை பின்புறத்தில் அர்ஜுன் பிரசாத் யாதவ் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். அவரது உடல் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டதால், பாதி எரிந்த நிலையில் காணப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற குலசேகரன்பட்டினம் போலீசார் அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருச்செந்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அர்ஜுன் பிரசாத் யாதவ் கொலை செய்யப்பட்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது. இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த இரண்டு வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.