திருச்செந்துாரில் கடல் அரிப்பு இரு அமைச்சர்கள் இன்று ஆய்வு
துாத்துக்குடி:திருச்செந்துார் கோவில் கடற்கரை பகுதியில், சில மாதங்களாக மண் அரிப்பு ஏற்பட்டு, பக்தர்கள் புனித நீராட முடியாத நிலை உள்ளது. கோவில் முன், 500 அடி நீளத்திற்கு, 7 அடி ஆழத்திற்கு மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.அங்கு யாரும் சென்றுவிடாதபடி கரையில் கம்புகளை கட்டி தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் மண் அரிப்பு பிரச்னையை தடுக்கும் வகையில், 18 கோடி ரூபாய் செலவில் பணிகளை மேற்கொள்ள சென்னை ஐ.ஐ.டி., அதிகாரிகள் குழுவினர் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.கடலில், 160 மீட்டர் நீளத்திற்கு அலை தடுப்புச்சுவர் அமைக்கவும், 700 மீட்டர் நீளத்திற்கு மணல் கொண்டு செயற்கையாக கடற்கரை உருவாக்கவும் ஐ.ஐ.டி., பரிந்துரை செய்துள்ள நிலையில், அதற்கான நிதியை யார் ஒதுக்கீடு செய்தவது என்பது தொடர்பாக அறநிலையத்துறைக்கும், மீன்வளத்துறைக்கும் பிரச்னை எழுந்துள்ளது.இதனால், பணிகள் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து நம் நாளிதழ் விரிவான செய்தி வெளியிட்டிருந்தது. இதன் எதிரொலியாக, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் குழு இன்று நேரில் ஆய்வு செய்ய உள்ளனர். அதன் பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்த விபரம் தெரியவரும்.அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''திருச்செந்துார் கடல் அரிப்பு தொடர்பாக, அமைச்சர் சேகர்பாபு, அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் என் தலைமையில், மீன்வளத்துறை அதிகாரிகளும் நேரில் வந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். கடல் அரிப்பை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.இதற்கிடையே, தொடர் கடல் அரிப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, ஹிந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேற்று துாண்டிகை விநாயகர் கோவில் முன், சூடம் ஏற்றி வழிபாடு நடத்தி, நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.